11.16.2023

கனா கண்டேன்...

கனா கண்டேன்...


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


அவ்வையின் பாடசாலையைக் கண்டேன்! 


பாரதி அங்கு புதுமைகளைக் கற்பிக்கும் காட்சிகளைக் கண்டேன்! 


அகத்தியர் வள்ளுவனிடம் பேசக் கண்டேன்! 


மாதம் மும்மாரி மழை பொழிவதைக் கண்டேன்! 


பாண்டிய தமிழ்ச் சங்கத்தில் 

சோழன் உரையாடக் கண்டேன்! 


கண்ணகியின் கால் சிலம்பின் மாணிக்கப் பரலைக் கண்டேன்! 


மதுரை எரிவதை கோவலன் அணைக்கக் கண்டேன்! 


சோழ தேசத்தின் செழிப்பைக் கண்டேன்! 


முல்லைக்குக் கொடுத்த தேரைக் கண்டேன்! 


அவ்வை உண்ட நெல்லிக்கனியையும் கண்டேன்! 


கல்லணைக்கு ஆங்கிலேயேன் கல்லை சுமக்கக் கண்டேன்! 


விடுதலைப்போரில் ராஜராஜனை கண்டேன்! 


ராஜேந்திர சோழனை கட்டபொம்மன் கட்டித்தழுவக் கண்டேன்! 


பாரதி 100 வருடம் வாழக் கண்டேன்! 


நள்ளிரவில் பெண் தன்னந்தனியாக வீதியில் நடக்கக் கண்டேன்! 


காந்தியடிகள் கண்ட கனவு பலித்ததென்று கணா கண்டேன்! 


கைபேசி சுமந்த கைகள் புத்தகங்களை ஏந்தக் கண்டேன்! 


உலகத் தமிழ் மாநாடு நடக்கக் கண்டேன்! 


தூய தமிழில் பதாகைகள் கண்டேன்! 


மக்கள் நெகிழிகளை தவிர்ப்பதை கண்டேன்! 


பொறியாளன் உழுவதைக் கண்டேன்! 


காதலர்களிடம் அகநானூற்றை கண்டேன்


நித்தம் இவ்வூர் பள்ளியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடக் கண்டேன்! 


நிலவிற்கு மனிதன் குடிபெயரவும் கண்டேன்! 


அங்கும் தமிழ் எழுத்து பொறிக்க கண்டேன்! 


புவியில் மக்களிடம் களவு இல்லாமை கண்டேன்! 


கள்ளுண்ணாமையும் கண்டேன்


பேரிடர் மற்றும் போர் அற்ற உலகைக் கண்டேன்! 


மனிதனும் மனித எந்திரமும் அளவற்ற அன்பைப் பரிமார கண்டேன்! 


தலைவர்களும் அறிஞர்களும் மறுபிறவி எடுக்கக் கண்டேன்! 


மனிதன் சூரியனைத் தொடுவதைக் கண்டேன்! 


வறுமை இல்லாத பசுமையைக் கண்டேன்! 


இயற்கையுடன் மக்கள் உறவாடக் கண்டேன்! 


கனவு மெய்ப்பட வேண்டும் என்று கனா கண்டேன்! 


தமிழ் அன்னை தலை கோதி எழுப்பும் வரை கனா கண்டேன்! 


தமிழ் ஆசிரியராய் எனக்கான பொறுப்பை என்னுள் உணரக் கண்டேன்! 



நன்றி!

தமிழ் வணக்கம்!! 


> மனோஜ்